கொரோனா நோய்த்தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டு தளர்வுகளற்ற ஊரடங்கின்போது மக்கள் அனைவரும் அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி, அவரவர் வீட்டிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மருத்துவ மற்றும் அத்தியாவசிய தேவை காரணமாக வீட்டை விட்டு வெளி வரவேண்டிய தருணம் ஏற்படின் அனைவரும் கட்டாயம் மூக்கையும், வாயையும் மூடியபடி முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டும். மேலும் கூட்டம் உள்ள இடங்களில் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வெளியில் சென்று வீட்டுக்கு வரும்பொழுது கைகளை நன்றாக சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும். இவைகள் கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாப்பதற்கான ஒரே வழியாகும். மேலும் கொரோனா நோய்ததொற்றிலிருந்து நம்மைப்பாதுகாக்கும் இன்னொரு கவசமாக தடுப்பூசி உள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதல் மற்றும் தமிழக அரசின் அறிவுரைகளின்படி 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் சீரிய முயற்சியின் பயனாக 18 முதல் 44 வயது உள்ளவர்களுக்கான தடுப்பூசி போடும் பணி
25.05.2021 - லிருந்து துவக்கப்பட்டு உள்ளது. இத்தடுப்பூசியை இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாசா, ஆற்காடு, கலவை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 5 அரசு மருத்துவமனைகளிலும், மேம்படுத்தப்பட்ட 7 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 29 ஆரம்ப சுகாதார மையங்களிலும் செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தடுப்பூசி எவ்வித கட்டணமுமில்லாமல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போடப்படும். தடுப்பூசி ஒன்றே நம்மைக்காக்கும் ஆயுதம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். தற்போது தடுப்பூசிகள் போதுமான அளவில் இருப்பில் உள்ளமையால், இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து 18 முதல் 44 வயது வரையுள்ள அனைவரும் தவறாமல் இத்தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு இராணிப்பேட்டை மாவட்ட கலக்டர் ஏ.ஆர். கிளாட் ஸ்டோன் புஷ்பராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.